பாண்டியனா கொக்கா?

Basileion Pandionis Modoura - என்று Ptolemy பாண்டிய தலைநகரை குறிப்பிடுகிறார். கடல்தாண்டி இந்தியாவோடு வணிகம் செய்த கிரேக்க மற்றும் எகிப்திய வியாபாரிகளும், யாத்திரிகர்களும் கூறியதன் அடிப்படையில் இப்படி எழுதியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. Ptolemy எழுதிய காலம் 140 C.E. இவருக்கு முன்பே பாண்டிய நாட்டின் முத்துக்களையும், 'muslin' எனும் மெல்லிய துணிகளையும் வாங்கி 'ஆதென்ஸ்' மாநகர கடைகளில் விற்று லாபமடைந்திருக்கிறார்கள் பல வணிகர்கள்.

வியாபாரம் மட்டுமின்றி கலாச்சார பரிமாற்றங்களும், இந்திய தத்துவச் சிந்தனைகளும் நிறைய 'ஆதென்ஸ்'-க்கும் குறிப்பாக Augustus-ன் தர்பார் வரைக்குமே பரவி அங்கிருந்தவர்களை ஓரிரு சந்தர்பங்களில் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது. இதுபற்றி பின்னர் பார்ப்போம்.

பாரசீக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்பு இருந்துவந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் King Solomon காலத்திலிருந்து அதிகரித்திருக்கிறது. அவர்கள் மயில் தோகைகளை அதிகம் விரும்பி வாங்கிச்சென்றுள்ளனர். வணிகப்பொருட்கள் பட்டியலில் 'tūki' என்ற சொல் ‘தோகை'யை குறிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், Solomon தர்பாரை சித்தரிக்கும் ஓவியங்களிலும் மயில்களும், தோகைகளும் இடம்பெற்றுள்ளன.

கிரேக்க காலங்கள் வரை இந்தியாவை அடைந்தவர்களெல்லாம், கடற்கரையை ஒட்டியே தங்கள் கப்பல் வழியை அமைத்துக்கொண்டனர். வழிநெடுக இருந்த பல்வேறு ஊர்களிலெல்லாம் வணிகமுகாம்கள் அமைத்தும் இருந்தனர். Hippalus என்ற ஒரு மாலுமி/வணிகர் (1 C.E) முதல்முறையாக, தைரியமாக, தென்மேற்கு பருவக்காற்றுள் தன் கப்பலை செலுத்தினார். இறுதியில், ஒரு வழியாக, அவர் தென்இந்திய எல்லையை அடைந்தாராம். இதன்மூலம் எகிப்துக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்யும் நேரம் அதிகளவு மிச்சமானதால் வணிகம் செழித்தது.

கிரேக்க குறிப்பேடுகளில் முக்கியமாக இடம்பெற்றுள்ள இரண்டு இடங்கள்: கன்னியாகுமாரி மற்றும் கொற்கை. 'Periplus Maris Erythraei' எனும் கிரேக்க கடற்பிரயாண கையேடு, கன்னியாகுமாரியை பற்றி “Comari என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கேயே, Cape of Comari மற்றும் ஒரு துறைமுகமும் இருக்கிறது” என்று குறிப்பிடுகிறது. மேலும், ”குடும்பத்தை துறந்து துறவறம் பூண்ட ஆண்களும் பெண்களும் இக்கடற்கரையில் புனித நீராடி தங்குகின்றனர். ஒரு காலத்தில் பெண் தெய்வம் ஒன்று இதேபோல குளித்து இங்கே தங்கியதாக சொல்லப்படுகிறது” என்று குறிப்பிடுவதன் மூலம் குமாரி அம்மனைப்பற்றியும் அங்கிருக்கும் கோயிலைப்பற்றியும் கூறுவது தெளிவாகிறது.

பாண்டிய மன்னனை Pandion/Pandae/Pandyon என்று பலவிதமாக குறிப்பிடும் கிரேக்க ஏடுகள், கொற்கை என்ற ஒரு வணிக துறைமுகம் பற்றியும் கூறுகிறன. “தெற்கே Comari கொண்ட நாடு, வடக்கே Colchi என்ற கடற்கரை துறைமுகத்தையும், அதனுடன் இணைந்த வளைகுடாவையும் உள்ளடக்கியது. Colchi-யில் முத்து எடுக்கும் தொழிலும், முத்துப்பண்ணைகளும் அதிகம் நடந்துவருகிறது. அத்தொழிலில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று 'Periplus' விவரிக்கின்றது. Ptolemy 'Kolkhoi' என்று குறிப்பிடுகிறார்.

கொற்கை, இன்றைக்கு, தூத்துக்குடிக்கு தென்மேற்கே கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர்கள் உள்ளே விலகி இருக்கின்ற ஒரு சின்ன கிராமம். ஆனால், கொற்கையில் கிரேக்க மன்னன் Augustus காலத்து காசுகளும், பானைகளும், வடஇந்திய Maurya அரசாங்க பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ”செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தாமிரபரணி ஆறு பழங்காலங்களில் கொற்கையை ஒட்டி வடக்கே சென்று தூத்துக்குடி அருகே கடலோடு சேர்ந்தது” என்று Current Science பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை நிருபித்துள்ளது.

சரி, பாண்டியனுக்கு மேற்கு கடற்கரையில் ஒன்றுமே இல்லியா என்றால், அதற்கும் பதில்தரும் விதமாக Neacynda என்ற ஒரு துறைமுகத்தை குறிப்பிடுகிறார் Pliny The Elder (23 – 79 C.E). இவர் எழுதிய Naturalis historia எனும் களஞ்சியத்தில், “Neacynda எனும் துறைமுகம் Porakad பகுதியில் உள்ளது. இது Pandion மன்னனின் ஆட்சியின் கீழ் விளங்கி வருகிறது. Pandion-னின் தலைநகரமான Madura கடற்கரையிலிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது” என்று கூறுகிறார். இன்று அழிந்துவிட்ட Nelcynda எனும் பழங்கால துறைமுகம் தற்கால கேரளாவிலுள்ள செங்கனூர்-க்கு அருகில் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

Augustus தர்பாரில் ஆச்சரியப்படுத்திய இந்தியர்களைப் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேனே? அது என்ன? ”13 C.E-யில் Augustus மன்னருக்கு பாண்டியன் எனும் இந்திய அரசன் ஒரு தூதர் கூட்டத்தை அனுப்பி தன் நட்பை வெளிப்படுத்தினான். அவர்களுடன் இருந்த ஒரு இந்திய தத்துவஞானி மந்திரிகள் கூட்டத்தின் நடுவே தன் நம்பிக்கைகளை நிரூபிக்கும் பொருட்டு ஒரு தீக்குண்டத்தை வளர்த்து அதிலேயே தன்னை இட்டு மாய்த்துக்கொண்டார்!” என்று Strabo (64 B.C.E – 24 C.E) எனும் கிரேக்க வரலாற்று நிபுணர் தன் குறிப்பீடுகளில் தெரிவிக்கின்றார். அந்த இந்தியரை “sramana" தத்துவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர் என்று சில தற்கால நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படியோ, முதலாம் நூற்றாண்டில் பாண்டிய நாடு ஒரு bustling ராஜ்ஜியமாக, இந்தியாவையும் தாண்டி தன் சிறகுகளை விரித்திருந்தது என்று விளங்குகிறது.

சுட்டிகள்:
History of Tinnevelly (Bishop R. Caldwell)
History of India from the Early Ages (James Talboy Wheeler)
Ptolemy எழுதிய Tetrabiblos (ஆங்கிலம்)
Strabo-வின் Geography (ஆங்கிலம்)
இந்தியாவுடனான ரோமானிய வணிகம்
Periplus Maris Erythraei (ஆங்கில மொழியாக்கம்)
கொற்கை பற்றிய ஒரு பயணக்கட்டுரை
Neacynda பற்றிய செய்தி
Berenice (இந்தியா - கிரேக்க/ரோமானிய வணிகத்தில் முக்கியமான எகிப்து நாட்டு துறைமுகம்)

1 comments:

TBCD said...

நல்ல தகவல்கள்... :)